நாட்டில் எங்குப் பார்த்தாலும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் தான்.... ஆனாலும் இந்தியாவில் வெறும் 44 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கிய நாள் முதலே போனிலும், டிவியிலும், ரேடியோவிலும் என எங்குப் பார்த்தாலும் கொரோனாவிலிருந்து எப்படித் தப்பிப்பது என்பது குறித்த விழிப்புணர்வு தான் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் நம் நாட்டில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை கூடுகிறதே தவிரக் குறையவில்லை. தினமும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்திற்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது. மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 57 லட்சத்தைத் தாண்டிவிட்டது. இறந்தவர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நோயாளிகளின் எண்ணிக்கையும், மரணமடைபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற போதிலும் மக்களிடையே இன்னும் கொரோனா குறித்த எந்த அச்சமும் இல்லை என்றுதான் கூறவேண்டும். பெரும்பாலோனோர் முகக் கவசம் கூட அணிவதில்லை என்று சமீபத்தில் இந்தியாவில் 18 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. 44 சதவீதம் பேர் மட்டுமே பொது இடங்களில் முகக் கவசம் கவசம் அணிகிறார்களாம்.
இவர்களில் 50% பேரும் தாங்கள் முக கவசம் அணியாததற்குக் காரணமாகக் கூறுவது மூச்சு விடச் சிரமமாக இருக்கிறது என்பதுதான். முகக் கவசம் அணிந்தால் எரிச்சலாகவும், வசதி குறைவாகவும் இருப்பதாக 44 சதவீதம் பேர் கூறுகின்றனர். சிலர் கூறுவது, சமூக அகலத்தைக் கடைப்பிடித்தால் மட்டும் போதுமே, எதற்குத் தேவையில்லாமல் முகக் கவசம் என்று கருதுகின்றனர்.
26 முதல் 35 வயதுடைய வயதுடையவர்கள், கொரோனாவில் தப்பிக்க சமூக அகலத்தைக் கடைப்பிடித்தால் மட்டும் போதும், முகக் கவசம் தேவையில்லை என நம்புகின்றனர். ஆண்களை விடப் பெண்கள் தான் அதிகளவில் முகக் கவசம் அணிவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிலும் முகக்கவசம் அணிபவர்களில் 73% பேர் மட்டுமே வாயையும், மூக்கையும் ஒழுங்காக மூடுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.