நிதிஷ் கட்சியில் டிஜிபி.. ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகளை தொற்றும் பதவி ஆசை..

Former Bihar DGP Gupteshwar Pandey to join Nitish Kumars JDU today.

by எஸ். எம். கணபதி, Sep 26, 2020, 13:49 PM IST

பீகார் மாநில போலீஸ் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே, பதவியை ராஜினாமா செய்து விட்டு நிதிஷ் கட்சியில் சேருகிறார். அவருக்கு சாக்பூர் சட்டசபைத் தொகுதியில் சீட் கொடுக்கப்பட உள்ளது.ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், கண்ணா நீ பெரியவனாவதும் கலெக்டர் ஆகணும், எஸ்.பி. ஆகணும்.. என்று சொல்லிப் படிக்க வைப்பார்கள். ஆனால், இப்போது அப்படி சொல்வதே அசிங்கமாகி விடும் போல் நாட்டின் நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமின்றி, தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகள் என்று பல்வேறு மட்டத்திலும் ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடித்து பெரிய பதவிகளைப் பிடிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. கடைசியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகாவில் ஐ.பி.எஸ். வேலையை உதறி விட்டு வந்து, பாஜகவில் சேர்ந்துள்ளார். அதிலும் நேரடியாக முதல்வர் பதவிக்கு அவர் போட்டியிட ஆசைப்படுவதாக எல்லாம் செய்திகள் வெளியாயின.

இப்போது பீகார் மாநிலத்தின் டிஜிபியே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்.எல்.ஏ. ஆகப் போகிறார். அம்மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கியஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முதல்வருக்கு ஜால்ரா அடிப்பதில் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டேவை யாருமே மிஞ்ச முடியாது. கடைசியாக, பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் மரண வழக்கில், மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் செயல்பட்டவர் இந்த குப்தேஸ்வர் பாண்டே. அதிலும், நடிகை ரியா சக்ரவர்த்தியை அசிங்கமாகப் பேசி சர்ச்சைக்கு உள்ளானவர்.
இவர் பதவி விலகி, பாஜகவில் சேரப் போகிறார் என்று கடந்த வாரம் செய்திகள் வெளியானதும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார். நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் இந்த விஷயத்தில் பாஜகவை வழக்கம் போல் போட்டுத் தாக்கினர்.

இதையடுத்து, பாஜக இவரைக் கைவிட்டு விட்டது.இந்நிலையில், குப்தேஸ்வர் பாண்டேவின் ராஜினாமாவை முதல்வர் நிதிஷ்குமார் உடனடியாக ஏற்றுக் கொண்டார். ஒரு மாதம் காத்திருப்பு நேரத்திலிருந்து விலக்கு கொடுத்து அவரை விடுவித்தார். இதைத் தொடர்ந்து, இன்று(செப்.26) நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் அவர் சேருகிறார். மக்கள் தன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளதாகவும் அவர்களுக்குச் சேவை செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் முன்பே அவர் அப்படிப் பேசப் பழகிவிட்டார்.

You'r reading நிதிஷ் கட்சியில் டிஜிபி.. ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகளை தொற்றும் பதவி ஆசை.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை