இந்தியத் தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கான சேவை உரிமம் உள்ளிட்ட சில விதிமுறைகளைத் தொலைத் தொடர்புத் துறை திருத்தியமைத்துள்ளது.
இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக கூறி, மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த புதிய சலுகையை வழங்கியுள்ளது.
செல்போன் சேவை நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ. 7 லட்சத்து 87 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் சுமை இருப்பதாகவும், குறைந்த கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதால் கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து இருப்பதாகவும் கூறி இந்த சலுகைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, அலைக்கற்றையை ஏலம் எடுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதற்கான தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை 16 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஏலத்தொகையை, 10 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும் என்று இருந்ததை மாற்றி அமைத்துள்ளது.
அதேபோல, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வைத்திருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை அளவானது 25 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.