2 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கொள்ளை... தங்க கடத்தல் கும்பலுக்குத் தொடர்பா என போலீஸ் விசாரணை ..

by Balaji, Sep 28, 2020, 16:53 PM IST

கேரள மாநிலம் செங்கன்னூரில் சிற்பக் கூடத்தில் தொழிலாளிகளைத் தாக்கிவிட்டு ரூ.2 கோடி மதிப்புள்ள பஞ்சலோக சிலைகளைக் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.ஆலப்புழை மாவட்டம் செங்கன்னூர் எம்.சி ரோட்டில் பணிக்கர் கிரானைட்ஸ் என்ற சாமி சிலைகள் வடிவமைப்பு கூடம் உள்ளது. இந்த கூடத்தில் 6 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர் . நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் தொழிலாளர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்த 60 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தில் வடிவமைக்கப்பட்ட அய்யப்பன் சிலை உட்பட சிலைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். சம்பவம் தொடர்பாக பணிக்கர் கிரானைட்ஸ் உரிமையாளர்களான மகேஷ் பணிக்கர், பிரகாஷ் பணிக்கர் ஆகியோர் செங்கன்னூர் போலீசில் புகார் செய்தனர்.

அவர்கள் தங்கள் புகாரில் கொள்ளையடிக்கப்பட்ட பஞ்சலோக சிலையின் மதிப்பு ௹. 2 கோடி என்றும், சிலை வடிவமைப்பிற்கு மட்டும் ஒரு கிலோ தங்கம் பயன்படுத்தி இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர். இதைத் தொடர்ந்து கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட இந்த சிலை வடிவமைப்பு கூடத்தில் ஏற்கனவே பணியாற்றிய காரய்க்காடு என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேரை போலீசார் தேடி வந்தனர். இன்று காலை இதில் 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பஞ்சலோக அய்யப்பன் சிலை லண்டனில் உள்ள ஒரு கோவிலில் வைப்பதற்காக இங்கு வடிவமைக்கப்பட்டு வந்தது. அந்த சிலையினை வடிவமைக்கக் கொடுத்தவர்கள்தான் ஒரு கிலோ தங்கத்தையும் கொடுத்து உள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் உரிமையாளர்கள் கொடுத்த தகவலில் முரண்பாடு இருப்பதால் சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் உரிமையாளர்களுக்கே கூட தொடர்பு உள்ளதா? என்றும் சிலை வடிவமைக்க ஆர்டர் கொடுத்தவர்களுக்குத் திருவனந்தபுரம் தங்கம் கடத்தலில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More India News

அதிகம் படித்தவை