கடந்த ஒரு மாதத்தில் கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை நூறு சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய்ப் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இது வரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தினமும் புதிதாக 85 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்படுகிறது.
இது வரை 93 ஆயிரம் பேர் வரை இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.எனினும் கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் விகிதம் இந்தியாவில்தான் அதிகம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நிலவரப்படி 25 லட்சத்து 23,771 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்திருந்தனர். அது செப்.28ம் தேதி நிலவரப்படி, 50 லட்சத்து 16,520 பேராக அதிகரித்துள்ளது. அதாவது குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை நூறு சதவீதம் அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், செப்.17ம் தேதியன்று குணம் அடைந்தவர் எண்ணிக்கை 40 லட்சமாக இருந்த நிலையில் 10 நாட்களில், செப்.28ம் தேதியில் அது 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.