உத்தரப்பிரதேச மாநிலத்தில் கூட்டுப் பலாத்காரம் செய்து நாக்கு அறுக்கப்பட்ட 19 வயது இளம்பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பலாத்காரம் செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களைக் கொடூரமாகத் தாக்கி கொல்லும் சம்பவங்களும் அதிக அளவில் நடைபெறுகின்றன.
இது குறித்து போலீசார் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காததே இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகரிப்பதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 14ம் தேதி வடக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் ஒரு 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரத்திற்கு இரையானார். இவர் தனது தாய் மற்றும் அண்ணனுடன் புல் வெட்டுவதற்காகச் சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண்ணைக் கடத்தி சென்றது. பின்னர் அந்த இளம்பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து நால்வரும் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்தனர். அதுமட்டுமில்லாமல் அந்த இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி நாக்கையும் அறுத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த அந்த இளம்பெண்ணை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது முதுகெலும்பு மற்றும் கழுத்தில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசாரின் அலட்சியமே இந்த கொடூர சம்பவத்திற்குக் காரணம் என அந்த இளம் பெண்ணின் உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் இது தொடர்பாக உடனடியாக ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும், அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 பேரைக் கைது செய்துள்ளதாகவும் போலீசார் கூறினர். மேலும் இந்த வழக்கை அதி விரைவு நீதிமன்றத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.