கேரளாவில் நாட்டு சாராயத்தை தேனில் கலந்து குடித்த மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மது அருந்தும் போது கூடுதல் 'கிக்' வருவதற்காக பலரும் பல வழிமுறைகளை கையாளுவார்கள். கேரளாவில் இதே போல 'கிக்'கை கூட்டுவதற்காக நாட்டு சாராயத்தில் தேன் கலந்து குடித்த மூன்று பேர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மனோஜ். இவர் நேற்று முன்தினம் தனது மனைவியுடன் இடுக்கி மாவட்டம் சித்திரபுரம் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றார். போகும்போது இரண்டு பாட்டில் நாட்டு சாராயத்தையும் கொண்டு சென்றுள்ளார்.
அங்குள்ள சுற்றுலா விடுதியில் தங்கிய மனோஜ், அந்த விடுதியின் உரிமையாளர் தங்கச்சன் மற்றும் அவரது உதவியாளர் ஜோபி ஆகியோருடன் சேர்ந்து நேற்று சாராயம் குடித்துள்ளார். அப்போது சாராயத்தில் தேன் கலந்து குடித்தால் கூடுதல் 'கிக்' கிடைக்கும் என்று தங்கச்சன் கூறியுள்ளார். இதையடுத்து உடனடியாக தேனை வாங்கி சாராயத்தில் கலந்து மூன்று பேரும் குடித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் மூன்று பேரும் வாந்தி எடுத்து அங்கேயே மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அடிமாலி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தங்கச்சன் மற்றும் ஜோபியின் உடல்நிலை மோசமானதால் அவர்கள் கோலஞ்சேரி அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மனோஜ் அங்கமாலி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மனோஜ் மற்றும் தங்கச்சன் கண்பார்வை பறிபோகும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து வெள்ளத்தூவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.