34 கோடிக்கு புது 2 ஆயிரம் நோட்டு எடுத்த வழக்கில் சிபிஐயிடம் ஆதாரம் இல்லை.. சேகர் ரெட்டி விடுவிப்பு..

No evidence against sekar Reddy in Rs.33 crore cbi case.

by எஸ். எம். கணபதி, Sep 29, 2020, 13:08 PM IST

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் ரூ.33.89 கோடிக்கு கட்டுகட்டாக புத்தம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு எடுக்கப்பட்ட வழக்கில் சிபிஐயிடம் ஆதாரம் இல்லை. அதனால், அந்த வழக்கில் சேகர்ரெட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதியன்று இரவில் பிரதமர் மோடி ஒரு திடீர் அறிவிப்பு வெளியிட்டார். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு பல கட்டுப்பாடுகளுடன் சில மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது புதிதாக ரூ.2000 நோட்டு வெளியிடப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டதால், வங்கியில் தினமும் இரண்டு நோட்டுகள் மட்டுமே தரப்பட்டன. மாதம்முழுவதும் நேர்மையாக உழைத்த மக்களால் அவர்களின் சம்பளப் பணத்தை வங்கியில் இருந்து மொத்தமாக எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.


அந்த ஆண்டு டிசம்பரில் பிரபல தொழிலதிபர் சேகர்ரெட்டி மற்றும் அவருடன் எஸ்.ஆர்.எஸ் சுரங்க கம்பெனியில் பங்குதாரர்களாக இருந்த 5 பேர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையிட்டனர். அந்த சோதனையில் ரூ.33.89 கோடிக்கு கட்டுகட்டாக புத்தம் புதிய ரூ.2000 நோட்டுகள் சிக்கின. வங்கியில் ஒரு ஆளுக்கு தினமும் 2 நோட்டுகளுக்கு மேல் தர முடியாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், எப்படி இவர்களால் பழைய நோட்டுகளை மாற்றி இவ்வளவு புதிய நோட்டுகளை வாங்க முடிந்தது என்று பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது, வருமான வரித்துறையின் தகவலின் அடிப்படையில் சி.பி.ஐ. மூன்று வழக்குகள் பதிவு செய்தன.
அவற்றில் 2 வழக்குகளில் எந்த ஆதாரமும் இல்லை என்று ஏற்கனவே ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இந்த நிலையில் 3வது வழக்கிலும் தங்களுக்கு ஆதாரமே கிடைக்கவில்லை என்று சி.பி.ஐ. கூறியிருக்கிறது. சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சிபி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்த இறுதி அறிக்கையில், ரிசர்வ் வங்கி அந்த சமயத்தில் புதிய ரூ.2000 நோட்டுகளை வங்கிகளுக்கு அனுப்பி வைத்தது. சில வங்கிகளின் அதிகாரிகளுடன் கைகோர்த்து மொத்தமாக ரூ.2000 நோட்டுகளை பெற்றிருக்கிறார்கள். ஆனால், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனால், வழக்கு முடித்து கொள்ளப்படுகிறது என்று கூறியிருந்தது.
இதை ஏற்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜவகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் சி.பி.ஐ. இறுதி அறிக்கையை ஏற்று வழக்கை ரத்து செய்து சேகர்ரெட்டி மற்றும் 5 பேரை விடுவிப்பதாக கூறியுள்ளார்.


சேகர்ரெட்டி மற்றும் அவரது நண்பர்கள், மொத்தமாக புதிய ரூ2000 நோட்டுகளை முறைகேடாக பெற்றதால், அரசுக்கு ரூ.247 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் சி.பி.ஐ. குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சேகர்ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் டிரஸ்ட் உறுப்பினராக இருந்தார். சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டதும் அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு, மீண்டும் டிரஸ்ட் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 34 கோடிக்கு புது 2 ஆயிரம் நோட்டு எடுத்த வழக்கில் சிபிஐயிடம் ஆதாரம் இல்லை.. சேகர் ரெட்டி விடுவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை