சத்தீஸ்கரில் பிஜாப்பூர் மாவட்டம் கங்களூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் 4 மாவோயிஸ்ட்டுகளைச் சுட்டுக்கொன்றனர். கடந்த 5 வாரங்களில் 4 காவல்துறையினர் உட்பட 12க்கும் மேற்பட்டோர் இந்த பகுதியில்தான் மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்டனர்.தாண்டேவாடா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் அருகே உள்ள வனப்பகுதிகளில் 120க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அங்கு 450 பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று காலை கங்களூர் பிராந்தியத்தில் உள்ள பெடபால் மற்றும் பிடியா கிராமங்களை நோக்கிப் பாதுகாப்புப் படையினர் முன்னேறி வந்தபோது மாவோயிஸ்டுகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து இருபிரிவினருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.. இதில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சுமார் 20 நிமிடங்கள் தாக்குதலுக்குப் பின்னர் மாவோயிஸ்டுகள் காட்டில் பின்வாங்கினர்.
கொல்லப்பட்ட 4 மாவோயிஸ்ட்டுகளில் ஒருவரது உடல் கைப்பற்றப்பட்டது. மற்ற மூவரின் உடல்களை அவர்களது சகாக்கள் கொண்டு சென்றதாக போலீசார் தெரிவித்தனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்டின் அடையாளம் தெரியவில்லை. அவரிடம் இருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் ஏராளமான மருந்துகள் கிடைத்துள்ளன.இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு வீரர்கள் யாரும் காயமடையவில்லை. கொல்லப்பட்ட மாவோயிஸ்டின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க உள்ளூர் மக்களிடமும் சரணடைந்த மாவோயிஸ்டுகளிடமும் அவரது உடல் காட்டப்படும் என காவல்துறை ஐ.ஜி, சுந்தர் ராஜ் தெரிவித்துள்ளார்.