கேரளாவில் 16 வயது மகளை 5 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த தந்தைக்கு 10 வருடம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குன்னிக்கோடு என்ற பகுதியில் ஒரு கூலித் தொழிலாளி குடும்பம் வசித்து வருகிறது. இந்த தொழிலாளிக்கு 16 வயதில் ஒரு மகள் உண்டு. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். வகுப்பில் நன்றாகப் படித்து வந்த அந்த மாணவிக்கு திடீரென படிப்பில் ஆர்வம் குறைந்து வந்தது. இதையடுத்து பள்ளி ஆசிரியைகள் அந்த மாணவியிடம் விசாரித்தபோது தான் அதற்கு என்ன காரணம் எனத் தெரியவந்தது. அந்த மாணவியின் தந்தை கடந்த 5 வருடங்களாக மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இதில் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியைகள் இதுகுறித்து குன்னிக்கோடு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசாரும், குழந்தைகள் நல அமைப்பினரும் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுமியின் தந்தை அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து மிரட்டி பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு கொல்லம் அதி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மகளைப் பலாத்காரம் செய்த தந்தைக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அபராத தொகை முழுவதையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்குக் கொடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்ட நீதிமன்றம், சிறுமிக்கு அரசு சார்பிலும் உதவி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. அபராத தொகையைக் கட்டாவிட்டால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.