வெறும் 15 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு தெரியும் புதிய ஆன்டிஜன் பரிசோதனையை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.தற்போது கொரோனாவை கண்டுபிடிக்க ஆண்டிஜன், பிசிஆர், ட்ரூ நாட், சிபி நாட் உள்பட பல்வேறு வகையான பரிசோதனைகள் உள்ளன. தொடக்கத்தில் இந்த நோயைக் கண்டுபிடிக்கப் பல நாட்கள் ஆனது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் உடனுக்குடன் முடிவு தெரியும் ஆன்டிஜன் பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பரிசோதனை மூலம் ஒரு சில மணி நேரங்களில் முடிவைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இதை முழுமையாக நம்பி விடமுடியாது.
சில சமயங்களில் ஆன்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் காண்பித்தால் பிசிஆர் பரிசோதனையில் பாசிட்டிவ் ஆகும். இதனால் இந்த பரிசோதனை முடிவை வைத்து ஒருவருக்கு கொரோனோ இருக்கிறதா இல்லையா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. அடுத்த பரிசோதனை நடத்தினால் மட்டுமே நோயைக் கண்டுபிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பெக்டன் டிக்கின்சன் நிறுவனம் புதிய ஆன்டிஜன் பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெறும் 15 நிமிடங்களில் முடிவைத் தெரிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனை கிட்டை எளிதில் எங்கு வேண்டுமென்றாலும் கொண்டு செல்லலாம். இதற்காகப் பரிசோதனை கூடம் எதுவும் தேவையில்லை. தற்போது இந்த பரிசோதனை முறை அமெரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் இதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் ஐரோப்பிய நாடுகளில் இந்த புதிய ஆன்டிஜன் கிட்டுகளின் விற்பனை தொடங்கும் என்று பெக்டன் டிக்கின்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் 2வது கட்ட பரவல் என்பதால் இந்த பரிசோதனை மிகவும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தங்களது புதிய ஆன்டிஜன் பரிசோதனை முடிவுகள் 99.3 சதவீதம் வரை துல்லியமாக இருக்கும் என்று பெக்டன் டிக்கின்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.