உலகத்தில் யாருக்குமே நான் பயப்பட மாட்டேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் நகரில் 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். அந்த பெண்ணின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்று(அக்.1) சென்றனர். ஆனால், அந்த ஊருக்குள் அவர்களை நுழைய விடாமல் எல்லையிலேயே அவர்களது வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ராகுல்காந்தி காரை விட்டு கீழே இறங்கி நடந்து செல்லத் தொடங்கினார். போலீசார் அவரை தடுத்தனர். இதன்பின், ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். பின்னர், அவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் 150 காங்கிரஸ் தொண்டர்கள் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ராகுல்காந்தி இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உலகத்தில் யாருக்குமே நான் பயப்பட மாட்டேன். எந்தவிதமான அநீதிக்கும் நான் கட்டுப்பட மாட்டேன். வாய்மையின் வலிமை கொண்டு பொய்களை எதிர்த்து போராடுவேன். பொய்களை நிச்சயம் வெற்றி கொள்வேன். இதயங்கனிந்த காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்
இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.