சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கல்பனா சாவ்லா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.அமெரிக்க விண்வெளித் துறை, சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆய்வு செய்து வருகிறது. அந்த விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருட்களை அவ்வப்போது அனுப்பி வைக்கும். இந்த வகையில், சரக்குகளை ஏற்றிய விண்கலனை சிக்னஸ் ராக்கெட் மூலம் கடந்த 1ம் தேதி இரவு விண்ணில் செலுத்துவதற்கு அமெரிக்க விண்வெளி மையமான நாசா திட்டமிட்டிருந்தது.
அந்த விண்கலத்துக்கு, கடந்த 2003-ம் ஆண்டு விண்வெளி விபத்தில் உயிரிழந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. வா்ஜினியா மாகாணம், வாலாப்ஸ் தீவில் உள்ள ஏவுதளத்திலிருந்து அந்த விண்கலம் ஏவப்படுவதாக இருந்தது. திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் அந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இந்த கல்பனா சாவ்லா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நாசாவின் வாலாப்ஸ் தளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டதாக நாசா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.