கேரளாவில் ஒரு வாகன வழக்கு தொடர்பாகப் பழக்கமான இளம்பெண்ணை 1 வருடமாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாபு மேத்யூ (55). இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன் முளம்துருத்தி என்ற போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார். அப்போது ஒருநாள் இவர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த 37 வயதான இளம்பெண் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் வந்தார்.
இதையடுத்து உடனடியாக அபராதத்தைக் கட்ட வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் பாபு மேத்யூ கூறினார். ஆனால் தன்னிடம் கையில் பணம் இல்லை என்றும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பணத்தைக் கட்டிக் கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார். அதற்கு சப் இன்ஸ்பெக்டரும் சம்மதித்தார்.
இதன்படி மறுநாள் அந்த இளம்பெண் போலீஸ் நிலையத்திற்குச் சென்று அபராதத்தைக் கட்டினார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் பாபு மேத்யூ அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக் கொண்டார். இதன் பின்னர் அடிக்கடி அந்த இளம்பெண்ணை போனில் அழைத்துக் கிளுகிளுப்பாக பேசி வந்துள்ளார். இதன் பின்னர் சில நாட்கள் கழித்து அந்த இளம்பெண்ணின் வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டு அவரது வீட்டுக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டி அவரை பலாத்காரம் செய்தார். இப்படி 1 வருடம் வரை அவர் பலாத்காரம் செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் சப்-இன்ஸ்பெக்டரின் தொல்லை அதிகரித்ததை தொடர்ந்து அந்த இளம்பெண் கொச்சி துணை போலீஸ் கமிஷனர் பூங்குழலியிடம் புகார் செய்தார்.
இதையடுத்து கடந்த மாதம் சப் இன்ஸ்பெக்டர் பாபு மேத்யூவுக்கு எதிராகப் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் போலீசிடம் சிக்காமல் தலைமறைவானார். இதற்கிடையே நீதிமன்றத்தில் அந்த இளம்பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு எதிராக ரகசிய வாக்குமூலம் கொடுத்தார். அதில் தன்னை ஒரு வருடமாக சப் இன்ஸ்பெக்டர் மிரட்டி பலாத்காரம் செய்த விவரத்தைக் கூறினார். இதையடுத்து தலைமறைவாக உள்ள சப் இன்ஸ்பெக்டரை உடனடியாக கைது செய்ய எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பாபு மேத்யூ எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.