260 பேர் பயணம் செய்ய வேண்டிய ஏர் இந்தியா விமானத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபர் தன்னந்தனியாக பறந்த சம்பவம் நடந்துள்ளது.
விமானத்தில் நாம் மட்டும் தனியாக பயணம் செய்ய வேண்டுமென்றால் அந்த விமானத்தையே வாடகைக்கு எடுக்க வேண்டும். ஆனால் கேரளாவைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு விமானத்தை வாடகைக்கு எடுக்காமலேயே தன்னந்தனியாக பயணம் செய்யும் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள வேங்கரா என்ற இடத்தை சேர்ந்தவர் சலாவுதீன் (29). இவர் அபுதாபியில் உள்ள அட்நாக் என்ற இடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் கோழிக்கோடு செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த விமானம் கொச்சி வழியாக கோழிக்கோடு செல்லவேண்டிய விமானமாகும். இதனால் கொச்சி செல்ல வேண்டிய ஏராளமான பயணிகளும் அந்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர் . கோழிக்கோட்டுக்கு செல்ல சலாவுதீன் உட்பட 10 பேர் டிக்கெட் எடுத்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் மற்ற 9 பயணிகளும் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டனர். துபாய் விமான நிலையத்தை அடைந்தபோது தான் அந்த விமானம் மதுரை வழியாக செல்வதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கொச்சி செல்ல வேண்டிய பயணிகள் அனைவரும் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். கோழிக்கோடு செல்லவேண்டிய சலாவுதீன், மதுரை வழியாக செல்லும் அந்த விமானத்தில் ஏறினார். மதுரைக்கு சென்றவுடன் அங்கு இறங்க வேண்டிய பயணிகள் அனைவரும் இறங்கினர். கடைசியில் சலாவுதீன் மட்டுமே விமானத்தில் இருந்தார். மதுரையில் இருந்து கோழிக்கோட்டுக்கு செல்ல பயணிகள் வருவார்கள் என அவர் கருதினார். ஆனால் யாரும் ஏறவில்லை. சலாவுதீனுடன் அந்த விமானம் கோழிக்கோட்டுக்கு புறப்பட்டது. மதுரையில் இருந்து கோழிக்கோடு வரை தன்னந்தனியாக சலாவுதீன் மட்டும் அந்த விமானத்தில் பயணம் செய்தார். இந்த அனுபவம் தன்னால் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்று சலாவுதீன் கூறுகிறார். தான் தன்னந்தனியாக விமானத்தில் பயணம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக இணைதளங்களில் அவர் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.