கொரோனா காலத்தில் வங்கிகளில் 6 மாதம் காட்டாமல் இருந்த இஎம்ஐக்கு அபராத மற்றும் கூட்டு வட்டியை ரத்து செய்திருப்பதாக தெரிவித்த மத்திய அரசின் விளக்கத்தில் திருப்தி இல்லாததால் மீண்டும் ஒரு வாரத்தில் விரிவாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காரணமாக பலரும் வேலை இல்லாமலும், சம்பளம் இல்லாமலும் தவித்தனர். இதையடுத்து வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கான இஎம்ஐ கட்டுவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் இந்த காலத்தில் கடன் தொகைக்கு அபராத மற்றும் கூட்டு வட்டி விதிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. வங்கிகளின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பலமுறை விசாரணை நடந்த போதும் அபராத மற்றும் கூட்டு வட்டியை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது.
வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறியது. ஆனால் உச்சநீதிமன்றம் வட்டியை ரத்து செய்ய வேண்டுமென கண்டிப்புடன் கூறியதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது. அதில் 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதத்திற்கான அபராத மற்றும் கூட்டு வட்டி ரத்து செய்யப்படுவதாக கூறியது.
இந்நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக ஒரு வாரத்தில் சந்தேகங்களை நிவர்த்தி செய்து மீண்டும் ஒரு பிரமாண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதி அசோக் பூஷண் உத்தரவிட்டுள்ளார். மேலும் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள விவரங்கள் முழுவதையும் படித்து அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் 1 வாரத்தில் தெரிவிக்கும்படி மனுதாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு மீதான விசாரணையை 13ம் தேதிக்கு நீதிபதி அசோக் பூஷண் தள்ளி வைத்தார்.