வயது ரூபத்தில் வந்தது நெருக்கடி எக்குதப்பு சிக்கலில் எடியூரப்பா

What is Eduyurappa going to do with the problem that came with age

by Balaji, Oct 5, 2020, 17:23 PM IST

கர்நாடகத்தில் ஆளும் பாஜகவில் முதல்வருக்கு ஆதரவானவர்கள் ஒருபுறமும் அவருக்கு எதிரானவர்கள் ஒருபுறமும் செயல்பட்டு வருகிறார்கள். எதிர்த்தரப்பில் முதல்வர் எடியூரப்பாவுக்கு கடும் குடைச்சல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த சிடி ரவி. அமைச்சராக இருந்த போதிலும் எடியூரப்பாவின் நடவடிக்கைகளை பகிரங்கமாக விளாசி த் தள்ளுவது இவருக்கு வாடிக்கை. இந்த விஷயத்தில் இவருக்கு பக்கபலமாக இருந்தவர் கர்நாடக மாநில பாஜக தலைவரான நவீன்குமார் கட்டீல். எடியூரப்பாவின் மகன் மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக சமீபத்தில் சிடி ரவி குற்றம் சாட்டியிருந்தார்.


இதனால் கடுப்பாகிப் போன எடியூரப்பா அதிருப்தியாளர்கள் குறித்து மேலிடத்தில் புகார் செய்திருந்தார்.இதைத்தொடர்ந்து அமைச்சராக இருந்த சிடி ரவிக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவியை பாஜக தலைமை வழங்கியது.
பாஜகவின் கட்சி விதிகளின்படி ஒருவர் ஒரு சமயத்தில் ஒரு பதவியை மட்டுமே வகிக்க முடியும். இதன் காரணமாக ரவி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பாவிடம் கொடுத்துவிட்டார். கடிதத்தை பெற்றுக்கொண்ட எடியூரப்பா சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டார். ஆனாலும் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. இப்போது அவருக்கு இடைஞ்சலாக வந்தது அவரது வயது தான். 78 வயதாகும் எடியூரப்பா எப்படி பதவியில் நீடிக்கலாம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் கர்நாடக மாநில பாஜக தலைவரான நவீன்குமார் கட்டீல். காரணம் பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதிமுறை இருப்பதுபோல் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த பதவியிலும் நீடிக்க கூடாது என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது.
இதுதான் இப்போது எடியூரப்பாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது வயதாகிவிட்ட எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதை சூசகமாக தெரிவித்திருக்கிறார் கட்சியின் மாநிலத் தலைவர்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சிடி ரவியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பாஜகவின் கட்சி விதிகள் கட்சியில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். கட்சியில் உள்ள அனைவரும் கட்சியின் விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சி மேலிடம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று சொல்லி எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியிருக்கிறார்..பாஜகவின் இந்த உட்கட்சிப் பூசலை மௌன புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்..எக்குத்தப்பாக சிக்கியிருக்கும் எடியூரப்பா என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

You'r reading வயது ரூபத்தில் வந்தது நெருக்கடி எக்குதப்பு சிக்கலில் எடியூரப்பா Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை