அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும் விருப்பமுள்ள மாணவர்கள் வீட்டிலிருந்தும் படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் 5வது கட்ட ஊரடங்கு நிபந்தனை தளர்வுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி அக்டோபர் 15 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் அந்தந்த மாநிலங்கள் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள சூழலைப் பொறுத்து பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் பள்ளிகளை திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு பெற்றோரின் அனுமதி கண்டிப்பாக தேவை. பெற்றோரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க வேண்டும். வகுப்பறைகளில் மாணவர்களை நெருக்கமாக அமர வைக்கக் கூடாது. சமூக அகலத்தை கடைப்பிடிக்கும் வகையில் இருக்கைகளை அமைக்க வேண்டும்.
ஆசிரியர்களும், மாணவர்களும், ஊழியர்களும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். நோய் பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்ல தேவையில்லை. பள்ளிகளில் விழாக்கள் உட்பட எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. இவ்வாறு மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.