சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போலீஸ் அதிர்ச்சி.

by Nishanth, Oct 6, 2020, 12:56 PM IST

நாடு முழுவதும் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் பகிரப்படுவது அதிகரித்துள்ளதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறையிடம் இன்டர்போல் தெரிவித்தது. இதையடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட்டிருந்து. இதையடுத்து கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்பட அனைத்து மாநிலங்களிலும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையை தொடங்கினர்.


கேரளாவில் ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் தலைமையில் சைபர் கிரைம் போலீஸ் அடங்கிய ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கடந்த சில மாதங்களாக கேரளா முழுவதும் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதில் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் டார்க் நெட் மூலம் ஆபாச வீடியோக்களைப் பார்ப்பது தெரியவந்தது. இதையடுத்து நடத்திய அதிரடி சோதனையில் 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆனாலும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது மீண்டும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் கேரளாவில் மலப்புரம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட 326 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 41 பேர் கைது செய்யப்பட்டனர். பாலக்காடு மாவட்டத்தில் தான் அதிகமாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். மலப்புரம் மாவட்டத்தில் அதிகமாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


கைது செய்யப்பட்டவர்களில் ஏராளமான சாப்ட்வேர் இன்ஜினியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஒரே நாளில் 227 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், ஹார்டு டிஸ்குகள், லேப்டாப்புகள் உள்ளிட்ட 255 எலக்ட்ரானிக் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த எலக்ட்ரானிக் உபகரணங்களில் சிறுவர், சிறுமிகளின் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கேரள ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் கூறியது: டார்க் நெட் மற்றும் வாட்ஸ்ஆப், டெலிகிராம் உட்பட சமூக வலைதளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.


பிக் மெலன்,கோல்டு கார்டன், தேவதை, கொரோனா, சுகவாசம் அயல்காரி உள்பட பல்வேறு பெயர்களில் இதுபோன்ற ஆபாச குரூப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 400க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். கேரளாவில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் தான் இந்த குரூப்பில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. இது தவிர மால்வேரின் உதவியுடன் சிறுவர், சிறுமிகளின் வெப்கேமராவிலிருந்தும் அவர்களுக்கே தெரியாமல் வீடியோக்களை திருடி சமூக இணையதளங்களில் பரப்புவதையும் கண்டுபிடித்துள்ளோம். இன்டர்நெட்டில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதை கண்டு பிடிக்க போலீசாருக்கு சிறப்பு வசதி உண்டு. இதற்காக தனியாக ஒரு சாப்ட்வேர் உள்ளது. அதன் உதவியுடன் ஆபாச படங்களைப் பார்ப்பவர்களின் ஐபி முகவரியை கண்டுபிடித்து அவர்களை கைது செய்ய முடியும் என்று கூறினார்.

Get your business listed on our directory >>More India News