ராம்விலாஸ் பஸ்வான் மரணத்தைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கேபினட் பொறுப்பில் ஒரு கூட்டணிக் கட்சி கூட இல்லை. ஒரேயொரு இணையமைச்சர் மட்டுமே கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவராக உள்ளார்.கடந்த 2014ம் ஆண்டு, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போது இந்த கூட்டணி மொத்தம் 336 இடங்களில் வென்றிருந்தது.
அதில் பாஜக மட்டும் 282 இடங்களைப் பிடித்திருந்தது. ஆட்சியமைக்க பாஜகவுக்கு போதுமான மெஜாரிட்டி இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், தெலுங்குதேசம், அசாம் கனபரிஷத், லோக் ஜனசக்தி என்று 20 கட்சிகளுக்கு கேபினட் அல்லது இணை அமைச்சர் பதவிகள் தரப்பட்டன.
அதற்குப் பிறகு, மோடி-அமித்ஷாவின் போக்கு பிடிக்காமல், தெலுங்கு தேசம் உள்பட ஒவ்வொரு கட்சியாக அமைச்சரவையில் இருந்து தாமாகவே விலகின. பல கட்சிகள் கூட்டணியை விட்டும் வெளியேறின. வெளியேறிய கட்சிகள் எல்லாமே மோடி மற்றும் அமித்ஷாவை கடுமையாக விமர்சிக்கவும் செய்தன.மீண்டும் 2019ல் தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைந்த போது, பாஜவுக்கு 303 இடங்கள் கிடைத்தன. இதையடுத்து, பாஜக இன்னும் அதிகாரமாக நடக்கத் தொடங்கியது. கடைசியாக, மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் முடிவுக்குப் பின், சிவசேனாவுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, மற்ற கட்சிகளை உடைப்பது போல், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்க பாஜக முயன்றது. சரத்பவாரின் உறவினரான அஜித்பவாரை இழுத்து ஆட்சியமைக்க முயன்றது. அதன்மூலம், சிவசேனாவை ஒடுக்க நினைத்தது. ஆனால், அது நிறைவேறாமல் போனது.
அந்த சமயத்தில், மத்திய கனரகத் தொழில் துறை அமைச்சராக இருந்த சிவசேனாவின் ஆனந்த் கங்காராம் கீதே, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினார். ஏற்கனவே 2 கேபினட் அமைச்சர் பதவி தராததால் கோபமடைந்த நிதிஷ்குமார், தனது ஐக்கிய ஜனதாதளம் மத்திய ஆட்சியில் பங்கேற்காது என விலகி விட்டார். ஆனாலும் அந்த கட்சி கூட்டணியில் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த மாதம் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப்பின் சிரோமணி அகாலிதளம் கட்சி, தே.ஜ.கூட்டணியில் இருந்து வெளியேறியது. அக்கட்சியின் சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார். மத்திய உணவு அமைச்சராக இருந்த லோக்ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்தார்.
இதையடுத்து, மோடி அமைச்சரவையில் கேபினட் பொறுப்பில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 1977ம் ஆண்டு முதல் மத்தியில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூட கேபினட் பொறுப்பில் இல்லாதது இதுவே முதல்முறையாகும். தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவையில் கேபினட் மற்றும் இணை அமைச்சர்கள் என 51 பேர் உள்ளனர். இதில் ஒரேயொரு இணை அமைச்சர் மட்டும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவராக உள்ளார். குடியரசு கட்சியைச் சேர்ந்த ராம்தாஸ் அதவாலே மட்டுமே சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையில் இணை அமைச்சராக உள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்பு, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்போது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் தரப்படலாம் என்றும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் கூட வாய்ப்பு தரப்படலாம் என்றும் பேசப்படுகிறது. அதே சமயம், பீகார் தேர்தலை மனதில் வைத்து அதற்கு முன்பாகவே அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்றும் அதில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இடம் பெறும் என்றும் பாஜக வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.