மீண்டு வருமா லட்சுமி விலாஸ் வங்கி?

Will Lakshmi Vilas Bank recover?

by Balaji, Oct 10, 2020, 16:54 PM IST

லட்சுமி விலாஸ் வங்கிக்கு இது போதாத காலம். பங்குதாரர்கள் மற்றும் வங்கியின் இயக்குனர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 6 இயக்குனர்கள் நீக்கப்பட்டனர். 94 வருடப் பாரம்பரியம் கொண்ட இந்த வங்கியின் நிர்வாக குழு கலைக்கப்பட்டு தலைமை செயல் அதிகாரி மற்றும் புரமோட்டர் இல்லாமல் தற்போது வங்கி செயல்பட்டு வருகிறது . இந்த வங்கியின் நிர்வாக சீரமைப்பு செய்யவும் புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த மோசமான நிகழ்வின் தாக்கமாக வங்கியின் பங்கு மதிப்பு மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டது. வங்கி திவாலாகி விடுமோ என்று வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான நபர்கள், ஊழியர்களும் ஒரு வித பீதி அடைந்தனர் இந்த நிலையில் தற்போது சற்று முன்னேற்றம் ஏற்பட்டு ஓரளவு நம்பிக்கை கீற்று தெரிகிறது.வங்கி நிர்வாகத்தைச் சீர்படுத்த ரிசர்வ் பேங்க் மற்றும் செபி ஆகியவை கண்காணித்து வரும் வேளையில் கிளிக்ஸ் குரூப் நிறுவனத்துடன் லட்சுமி விலாஸ் வங்கி ஏற்கனவே இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் கிளிக்ஸ் கேபிடல் நிறுவனம் லட்சுமி விலாஸ் வங்கி உடன் வர்த்தக ரீதியான இணைப்பிற்குச் சம்மதம் தெரிவித்து உள்ளது.இது லட்சுமி விலாஸ் வங்கியை ஆபத்திலிருந்து காப்பாற்றும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பையும் பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகளின் மதிப்பும் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

கிளிக்ஸ் நிறுவனத்துடனான வர்த்தக இணைப்புக்கு அந்த நிறுவனம் கொடுத்த நான் பைன்டிங் ஆர்டருக்கான விண்ணப்பத்தை லட்சுமி விலாஸ் வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து லட்சுமி விலாஸ் வங்கி தனது வர்த்தகத்தை கிளிக் நிறுவனங்களான கிளிக்ஸ் கேபிடல் சர்வீஸ் கிளிக்ஸ் பைனான்ஸ் மற்றும் கிளிக்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைக்கும் பணிகளைத் துவக்கியுள்ளது.இந்த பணிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆகியவற்றின் கண்காணிப்பிலேயே நடக்க உள்ளது.

கிளிக்ஸ் நிறுவனத்துடனான இணைப்பு ஒப்பந்தம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜூன் மாதமே கையெழுத்தாகி விட்டது. எனினும் கொரானா ஊரடங்கு காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டு முழுமையான நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டன.அதற்குள் அங்கே நிர்வாக குழுவில் பிரச்சினை ஏற்பட்டதால் எல்லா நடவடிக்கையும் தள்ளிப்போனது .

தற்போது ரிசர்வ் வங்கி ,லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தைத் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக தலைவர் ஆகிய பொறுப்புகளை மீட்டா மக்கான் என்பவருக்கும், இயக்குனர்கள் குழுவில் உறுப்பினராகச் சக்தி சென்ற மற்றும் சதீஷ்குமார் கேரளா ஆகியோருக்கும் கொடுத்திருக்கிறது இந்த மூவரும் தங்களது பணிகளைத் தொடர ஒத்துழைப்பு அளிப்பதாகப் பங்குதாரர்கள் வாக்களித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த வங்கியைக் கைப்பற்ற இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் முயற்சி செய்தபோது ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துவிட்டது. தற்போது கிளிக்ஸ் கேபிடல் உடனான வர்த்தக இணைப்பு தொடர்ந்தாலும். இது நல்லபடியாக முடியுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. கிளிக்ஸ் நிறுவனம். இணையும் பட்சத்தில் தான் வங்கியில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியும்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை