பிரபல பாலிவுட் டைரக்டர் ராகேஷ் ரோஷனை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது பரோலில் இறங்கித் தலைமறைவான பிரபல ரவுடியை 3 மாதங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.பிரபல பாலிவுட் டைரக்டரும், நடிகர் ஹிருத்விக் ரோஷனின் தந்தையுமான ராகேஷ் ரோஷன் கடந்த 2000ம் ஆண்டு துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை சாந்தா குரூஸ் பகுதியிலுள்ள இவரது அலுவலகம் அருகே வைத்து பிரபல ரவுடியான சுனில் கெய்க்வாட் 6 ரவுண்ட் துப்பாக்கியால் சுட்டான். இதில் பலத்த காயமடைந்த ராகேஷ் ரோஷன் மருத்துவமனையில் பலமாத சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறினார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து சுனில் கெய்க்வாடை கைது செய்தனர். இவன் மீது ஏற்கனவே 11 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் உள்பட ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. 1999 மற்றும் 2000 வருடங்களில் மும்பையில் நடந்த பல வன்முறைச் சம்பவங்களில் இவனுக்குப் பங்கு உண்டு.
பிரபல ரவுடி கும்பல் தலைவர்களான அலி புதேஷ், சுபாஷ் சிங் தாக்கூர் ஆகியோரின் கும்பலில் சேர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தான். இவன் மீது நாசிக்கில் ஒரு திருட்டு வழக்கும், போலீசாரை துப்பாக்கியைச் சுட்ட வழக்கும் உண்டு.இந்நிலையில் ஒரு கொலை வழக்கில் ரவுடி சுனிலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இவன் நாசிக் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டான். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இவனுக்கு 28 நாள் பரோல் கிடைத்தது.
இதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த சுனில் தலைமறைவானான். அவனை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தானே பகுதியில் சுனில் இருப்பதாகப் போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மும்பை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அனில் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சுனிலை கைது செய்தனர்.