ஆன்லைன் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஆர்டிஜிஎஸ் வசதி வரும் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கிக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் தாங்களாகவே ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது.
இதில் இரண்டு விதமான நடைமுறை தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. என். இ.எப்.டி எனப்படும் நேஷனல் எலக்டிரானிக் ஃபண்ட் டிரன்ஸ்ஃபர் என்பது ஒரு வகை. ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் சிஸ்டம் எனப்படும் ஆர்டிஜிஎஸ் என்பது மற்றொரு வகை.
இதில் என். இ.எப்.டி மூலம் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் அதற்கு மேல் ஆர்டிஜிஎஸ் முறையில்தான் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.மேலும் இந்த விதமான இந்த வித ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலித்து வந்தன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இதற்கான கட்டணங்களை ரிசர்வ் வங்கி முழுமையாக ரத்து செய்தது.
இந்த இருவித பணப் பரிமாற்ற வசதி இந்த சேவை தற்போது வங்கி வேலை நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு பயன்படுத்த முடியாது என்பதால் பலருக்கும் இதனால் பயனில்லாத நிலை இருந்து வந்தது. ஏடிஎம் சேவையைப் போல இந்த சேவையையும் 24 மணி நேரமும் பயன்படுத்த வழி செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து ஆர்டிஜிஎஸ் சேவையை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார். நேற்று ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை வெளியிட்ட கவர்னர் சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பையும் தொடர்ந்து வெளியிட்டார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.