மூணாறில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை கேரள அரசு போக்குவரத்து கழகம் தயாரித்துள்ளது.
கேரள அரசு போக்குவரத்து கழகம் தற்போது மிகக் கடுமையான நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஒரு மாதத்திற்கு சராசரியாக ₹60 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. நஷ்டத்தை சரிக்கட்டி அரசுப் போக்குவரத்துக் கழகத்தை லாபத்தில் கொண்டு வர கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் நஷ்டம் கூடிக் கொண்டு வருகிறதே தவிர எந்த பலனும் இதுவரை ஏற்படவில்லை. கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு நஷ்டம் அதிகரிக்க தொழிலாளர் சங்கங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் எந்த உயர் அதிகாரி வந்தாலும் அவர் ஒரு சில மாதங்களிலேயே விரட்டி அடிக்கப்படுவார்கள். தொழிலாளர் சங்கங்களின் வலிமைக்கு முன்னால் அரசால் கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரியான பிஜு பிரபாகர் என்பவரை அரசு நியமித்தது. இவர் சில அதிரடி திட்டங்களை நிறைவேற்றி போக்குவரத்து கழகத்தை லாபத்தில் கொண்டுவர முடியுமா என ஆலோசித்து வருகிறார். இதன்படி அரசு பஸ்சை சுற்றுலா பயணிகள் தங்கும் கெஸ்ட் ஹவுசாக மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மூணாறில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இதன் நிர்வாக இயக்குனர் பிஜு பிரபாகர் தீர்மானித்துள்ளார். இதன்படி ஏசி பஸ் 16 பேர் தங்கும் வகையில் மாற்றப்பட உள்ளது. ரயில்களில் ஸ்லீப்பர் கோச் இருப்பது போல தனித்தனியாக 16 பேர் படுத்து தூங்கலாம்.
ஒவ்வொரு படுக்கையிலும் செல்போன் சார்ஜர், பொருட்களை வைக்கும் இடம் உள்பட அனைத்து வசதிகளும் இருக்கும். இந்த பஸ்கள் மூணாறு டெப்போவில் நிறுத்தப்பட்டிருக்கும். அங்குள்ள கழிப்பறைகளை பஸ்சில் தங்குபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. கட்டணம் மிகக் குறைவாகவே இருக்கும் என்று அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த திட்டம் வெற்றி பெற்றால் மேலும் பல சுற்றுலா மையங்களில் இதேபோல தங்கும் பஸ் வசதி ஏற்படுத்தப்படும் என்று நிர்வாக இயக்குனர் பிஜு பிரபாகர் கூறுகிறார்.