குமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் நவராத்திரி ஊர்வலம்..!

by Nishanth, Oct 13, 2020, 11:49 AM IST

இந்து அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து இவ்வருடம் வழக்கம்போல பாரம்பரிய முறைப்படி குமரியிலிருந்து நவராத்திரி ஊர்வலம் திருவனந்தபுரம் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசுவாமி, பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதிதேவி விக்கிரகங்கள் பவனியாகப் புறப்பட்டு ஊர்வலமாகத் திருவனந்தபுரம் செல்லும்.

வெள்ளிக்குதிரை மற்றும் யானை பவனியுடன் மன்னரின் உடைவாளும் உடன் எடுத்துச் செல்லப்படும். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் உட்படக் கோவில்களில் இந்த விக்கிரகங்கள் வைக்கப்பட்டு 9 நாட்கள் பூஜை செய்யப்படும். நவராத்திரி விழா முடிந்த பின்னர் விக்கிரகங்கள் குமரி மாவட்டத்திற்குத் திரும்ப எடுத்துச் செல்லப்படும்.

குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் வழிநெடுக இந்த ஊர்வலத்திற்குப் பொதுமக்கள் வரவேற்பு கொடுப்பார்கள். 3 நாட்கள் இந்த ஊர்வலம் நடத்தப்படும். கடந்த பல வருடங்களாகப் பாரம்பரியமாக இந்த நவராத்திரி ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நவராத்திரி ஊர்வலத்தை நடத்தக் கூடாது என்றும், விக்கிரகங்களை வாகனங்களில் வைத்து ஒரே நாளில் திருவனந்தபுரம் கொண்டு செல்ல வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. இதற்குக் குமரி மாவட்டத்திலும், திருவனந்தபுரத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கேரள மற்றும் குமரி மாவட்ட நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக, காங்கிரஸ் உள்படக் கட்சியினரும், இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திருவனந்தபுரத்தில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இரு மாநில அறநிலையத் துறை அதிகாரிகள் கொண்டனர். கூட்டத்தில் வழக்கம்போல பாரம்பரிய முறைப்படி நவராத்திரி ஊர்வலத்தை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. ஊர்வலத்தில் கொரோனா நிபந்தனைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி இன்று காலை 8 மணி அளவில் சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பத்மநாபபுரம் அரண்மனையை இன்று மாலை அடையும். நாளை பத்மநாபபுரம் அரண்மனையில் வைத்து இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் உடைவாள் கைமாறும் சடங்கு நடைபெறும். தொடர்ந்து நாளை நவராத்திரி ஊர்வலம் பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து புறப்படும். இந்த ஊர்வலம் களியக்காவிளை, நெய்யாற்றின் கரை வழியாக 16ம் தேதி திருவனந்தபுரத்தை அடைகிறது.

நவராத்திரி ஊர்வலத்தின் முன்னோடியாக சுசீந்திரத்தில் புறப்பட்ட முன்னுதித்த நங்கை பவனியை காண கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்யவும்.

Get your business listed on our directory >>More India News