பீகார் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்ட தேர்தல் இம்மாதம் 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாமல் தாதாக்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வழக்குகளை எதிர்கொள்ளும் அனந்த்சிங் என்பவர் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் மொகமா சார்பில் போட்டியிடுகிறார்.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், 71 தொகுதிகளுக்கு முதற் கட்டமாக வரும் 28ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் ராஷ்டிரிய ஜனதா தளம், பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி மற்றும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி போன்ற கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் சார்பாகப் போட்டியிடும் 353 வேட்பாளர்களில், 164 வேட்பாளர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கற்பழிப்பு, ஆள் கடத்தல் மற்றும் பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில், மொகமா தொகுதியில் போட்டியிடும் "அனந்த்சிங்" என்பவர் மீது கொலை, ஆள் கடத்தல், பணம் பறித்தல் மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் கடத்தல் உட்பட 38 வழக்குகளா நிலுவையில் உள்ளன. ஆனால் அவர் 2015 ல் நடந்த தேர்தலில் சிறையிலிருந்த படியே சுயேட்சையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 2005 மற்றும் 2010 ல் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளார்.
தனம்பூர் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் "ரிட்லால்" மீது 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஹவலா பண மோசடி வழக்கில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.பாஜக முன்னாள் தலைவர் சத்யநாராயண் சின்ஹா 2005 ல் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, அவரின் மனைவி தேர்தலில் போட்டியிடுகிறார்.நேர்மை , நியாயம் , சேவை இதெல்லாம் கானல்நீராகிப் போன அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்கிறார்கள் அரசியல் விமர்சிகர்கள்.