பிரிந்து வாழ்ந்தாலும் கணவனின் குடும்ப வீட்டில் மனைவி தொடர்ந்து வசிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.டெல்லியைச் சேர்ந்தவர் சதீஷ் சந்தர் அஹுஜா. இவரது மகன் ரவீன் அஹுஜா. இவருக்கும் சினேகா என்பவருக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு சில வருடங்களிலேயே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் விவாகரத்து செய்து கொள்ளத் தீர்மானித்தனர். இதுதொடர்பாக டெல்லி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இந்நிலையில் சமீபத்தில் சினேகா கணவர் ரவீன அஹுஜாவின் குடும்ப வீட்டுக்குச் சென்று அங்கு வசித்து வந்தார்.
இதை எதிர்த்து ரவீனின் தந்தை சதீஷ் சந்தர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னுடைய வீட்டில் இருந்து மருமகளை வெளியேற்ற வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சதீஷ் சந்தரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சதீஷ் சந்தர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார்.இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சதீஷ் சந்தர் கூறும்போது, நான் சொந்தமாகச் சம்பாதித்த வீட்டில் என்னுடைய மகன் ரவீனுக்கு எந்த உரிமையும் இல்லை. பாரம்பரியமாகக் கிடைக்கும் சொத்திலோ வீட்டிலோ தான் குழந்தைகளுக்கு உரிமை உள்ளது.
எனவே என்னுடைய மருமகளுக்கு என்னுடைய வீட்டில் தங்க உரிமை கிடையாது. இதனால் அவரை வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என வாதிட்டார். ஆனால் அதை ஏற்க மறுத்த டிவிஷன் பெஞ்ச், கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்தாலும் கணவனின் குடும்ப வீட்டில் மனைவி வசிக்கலாம் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஒரு பெண் குடும்பத்தில் மகள், சகோதரி, மனைவி, தாய் எனப் பல முக்கிய உறவுகளை வகிக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.