தமிழகத்தில் கிராம சபை கூட்டத்தை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கிராம சபை கூட்டத்தை நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த லூயிஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அவர் தமது மனுவில், கொரோனா தொற்றின் காரணமாக ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதனால் கிராமப்புறங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்த முடியாமல் குடிமராமத்து போன்ற பணிகள் நடக்காத சூழ்நிலை இருந்து வந்தது. இந்த சூழலில் அக்டோபர் 2ஆம் தேதி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 1ஆம் தேதி திடீரென கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது. தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு, உணவு விடுதிகள் கடைகளும் திறக்க அனுமதி அளித்த நிலையில் கிராம சபை கூட்டத்தை மட்டும் ரத்து செய்திருப்பது சட்ட விரோத செயலாகும். இதனால் கிராமப்புறங்களில் நடக்கவிருக்கும் பல்வேறு வேலைகள் நடைபெற்றுள்ளன .
எனவே தமிழகத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.