காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் பணிகள் தொடங்கியது.. ஜனவரியில் புதிய தலைவர் தேர்வு..

Congress organisational election Process begins.

by எஸ். எம். கணபதி, Oct 16, 2020, 18:54 PM IST

காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்குவதற்குத் தேர்தல் கமிட்டி தீர்மானம் இயற்றியுள்ளது. 2021ம் ஆண்டு ஜனவரிக்குள் புதிய செயற்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்து, புதிய தலைவரையும் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம் நபி ஆசாத், சசிதரூர், பூபிந்தர்சிங்ஹூடா, மிலிந்த் தியோரா, மணீஷ்திவாரி, குரியன் உள்பட 23 பேர் இணைந்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.

அதில் சோனியா பதவி விலகி, நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். இந்த சூழலில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம், கடந்த ஆக.24ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. சோனியா காந்தி தலைமை வகித்தார். அவர் இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், உடனடியாக புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது கூறினார்.

இதையடுத்து, மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் சோனியாவே தலைவராக நீடிக்க வேண்டுமென்றனர். அகமது படேல், அமரீந்தர்சிங் உள்ளிட்டோர் சோனியாவுக்கு ஆதரவாகப் பேசியதுடன் கடிதம் எழுதியவர்களை விமர்சித்தார்கள். இதன்பின், புதிய தலைவரைத் தேர்வு செய்யும் வரை தற்காலிக தலைவராகத் தான் தொடர்வதாகச் சோனியா அறிவித்தார்.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு, குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில் நேற்று நடைபெற்றது. அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உட்கட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், ஜனவரிக்குள் புதிய செயற்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்து, தொடர்ந்து புதிய தலைவரையும் தேர்வு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.முதலில் மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள். அடுத்து, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக்கான உறுப்பினர்களை எல்லா மாநிலங்களில் இருந்தும் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், அந்த உறுப்பினர்கள் செயற்குழுவுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள். காங்கிரஸ் சட்டவிதிகளின்படி 11 செயற்குழு உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும். 12 உறுப்பினர்களைத் தலைவர் தேர்வு செய்ய வேண்டும். அனைத்து தேர்தல்களும் முடிந்த பின்பு, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் நடைபெறும்.

தலைவர் பதவியிலிருந்து கடந்தாண்டு விலகிய ராகுல்காந்தி, புதிய தலைவராக தங்கள் குடும்பத்தைச் சேராத ஒருவர் வர வேண்டுமென்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

You'r reading காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் பணிகள் தொடங்கியது.. ஜனவரியில் புதிய தலைவர் தேர்வு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை