அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, மதுராவில் கிருஷ்ணர் கோயில் அருகே உள்ள மசூதியை இடிக்கக் கோரி, உ.பி. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் கோயில் இருந்ததாகவும், அது முகலாயர் ஆட்சியில் இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
நீண்ட காலமாக நிலுவையிலிருந்த இந்த வழக்கில் சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதன்படி, அந்த சர்ச்சைக்குரிய இடம் ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் ராமர் அவதரித்ததாக இந்து மதத்தினர் நம்புவதைப் போல், அம்மாநிலத்தின் மதுராவில் கிருஷ்ணர் அவதரித்ததாகவும் கூறப்படுகிறது. கத்ராகேசவ் தேவ் என்ற அந்த பகுதியைக் கிருஷ்ண ஜென்ம பூமி என்றே அழைக்கின்றனர். அங்குள்ள கிருஷ்ணர் கோயில் அருகே ஷாஹி ஈத்கா மசூதி உள்ளது.
தற்போது, இந்த மசூதியை அகற்றக் கோரி, உ.பி. மாநிலம் மதுராவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த செப்.26ம் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து கூடுதல் நீதிபதி சாயா சர்மா கடந்த 2ம் தேதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, மாவட்ட நீதிமன்றத்தில் அப்பீல் வழக்கைப் பகவான் ஸ்ரீகிருஷ்ணா விர்ஜ்மான் அமைப்பு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை மதுரா மாவட்ட நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 1658ம் ஆண்டு முதல் 1707ம் ஆண்டு வரை இந்தியாவை முகலாய மன்னர் அவுரங்கசீப் ஆண்டு வந்தார். அப்போது மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள கிருஷ்ணர் கோயிலின் ஒருபகுதி இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டுள்ளது. அதனால், அந்த மசூதியை இடித்து அந்த இடத்தை கிருஷ்ணர் கோயிலுக்கு மீண்டும் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.