தங்கக் கடத்தல் வழக்கு ஐஏஎஸ் அதிகாரி விரைவில் கைதாகிறார்.

Kerala IAS officer sivasankar may approach high court for bail application

by Nishanth, Oct 18, 2020, 14:24 PM IST

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், இன்னும் ஒருசில தினங்களில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு கேரளாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் முதல்நிலை செயலாளராகவும் இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த தங்க கடத்தலில் கேரள அரசில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஏற்கனவே புகார் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறை, சுங்க இலாகா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ ஆகியவை பலமுறை விசாரணை நடத்தின. ஒவ்வொரு முறை விசாரணை நடத்தப்படும் போதும் சிவசங்கர் கைது செய்யப்படுவார் என பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து நடந்த விசாரணையில் இருந்து அவர் எளிதில் தப்பித்து வந்தார். விசாரணை அமைப்பினரின் பல கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கும் சளைக்காமல் அவர் பதில் கொடுத்து வந்தார். பல கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி நழுவினார். இதையடுத்து அவரை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சிவசங்கருக்கு கேரளா அரசும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தது.

இதனால் தான் தன்னை யாராலும் கைது செய்ய முடியாது என கருதி அவர் முன்ஜாமீன் மனு கூட தாக்கல் செய்யாமல் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது. சிவசங்கருக்கு எதிராக அமலாக்கத் துறைக்கு சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் இதை அறிந்துகொண்ட சிவசங்கர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து வரும் 23ம் தேதி வரை சிவசங்கரை கைது செய்ய மத்திய அமலாக்கத் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் சிவசங்கருக்கு எதிராக சுங்க இலாகாவுக்கு தற்போது சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் அவரை கைது செய்யும் முடிவுடன் திருவனந்தபுரத்தில் உள்ள சிவசங்கரின் வீட்டிற்கு சுங்க இலாகா அதிகாரிகள் சென்றனர். பின்னர் அவரை விசாரணைக்காக காரில் கொண்டு சென்ற போது திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து உடனடியாக அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவருக்கு வேறு உடல் நலக் கோளாறு எதுவும் இல்லை என்றும் லேசான முதுகுவலி மட்டுமே இருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து கூடுதல் பரிசோதனைக்காக அவரை சுங்க இலாகாவினர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இங்கு நடத்தப்படும் பரிசோதனையில் அவருக்கு உடல் நலக் கோளாறு எதுவும் இல்லை என தெரிய வந்தால் உடனடியாக அவரை கைது செய்ய சுங்க இலாகாவினர் திட்டமிட்டுள்ளனர். அவரை கைது செய்யும் போது கேரள போலீசிடமிருந்து இடையூறு வரலாம் என கருதப்படுவதால் மருத்துவமனைக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு கோரி மத்திய அரசிடம் சுங்க இலாகா விண்ணப்பித்துள்ளது. இன்னும் சில நாட்களில் சிவசங்கர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டால் கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். இதற்கிடையே கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க சிவசங்கர் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More India News

அதிகம் படித்தவை