மத்திய அரசு அனுமதி அளித்தால் டிசம்பர் 1ம் தேதி முதல் ரயில்களை ஓட்ட இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் முதல் நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில்வே துறைக்கு பல ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சரக்கு போக்குவரத்தும் முடங்கியதால் ரயில்வேக்கு மட்டுமல்லாமல் மாநில மற்றும் மத்திய அரசுக்கும், தனியாருக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அவர்களது ஊர்களுக்கு செல்வதற்காக முக்கிய நகரங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை திருவனந்தபுரம் உள்பட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. தற்போது பல்வேறு பகுதிகளில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசு அனுமதி அளித்தால் டிசம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தை தொடங்க ரெயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதற்காக ரெயில்வே அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். டிசம்பர் முதல் ரெயில்கள் இயக்கப்பட்டால் புதிய கால அட்டவணையின் படியே ரெயில்கள் இயக்கப்படும். புதிய ரெயில்வே அட்டவணை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை கட்டத்தை அடைந்துள்ளன. இதற்கிடையே வருமானம் இல்லாமல் ஓடும் ரெயில்களை நிறுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 650க்கும் மேற்பட்ட ரயில்கள் வருமானம் இல்லாமல் இயங்குவது தெரிய வந்துள்ளது. இந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்படும். இது தவிர பல பயணிகள் ரெயில்கள் மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றப்படும். மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சூப்பர் பாஸ்ட் ரெயில்களாக மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருமானம் குறைந்த ஸ்டாப்புகளும் நிறுத்தப்படும்.
மேலும் பல ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தவிர பல முக்கிய ரெயில்களில் இரண்டாவது வகுப்பு ஸ்லீப்பர் கோச்சுகளை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக ஏசி கோச்சுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.