ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளி இறந்த பரிதாபம் நர்சுகள் அலட்சியம்

Covid patient dies due to lack of oxygen

by Nishanth, Oct 19, 2020, 14:23 PM IST

கேரள மாநிலம் கொச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வென்டிலேட்டர் டியூப்கள் மாறிக் கிடந்ததால் கொரோனா நோயாளி ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை வெளியே கொண்டு வந்த மருத்துவமனை நர்சிங் கண்காணிப்பாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்தியாவிலேயே சுகாதாரத் துறை சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. கடந்த இரு வருடங்களுக்கு முன் இந்த மாநிலத்தில் பரவிய நிப்பா வைரஸ் காய்ச்சல், சிறப்பான தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அதிக அளவில் பரவாமல் தடுக்கப்பட்டது. கொரோனாவின் தொடக்கக் காலகட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் சமீபகாலமாகச் சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் நோய் பரவல் அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேரள அரசைக் குற்றம் சாட்டிப் பேசினார். கேரளாவில் தொடக்கக் காலகட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சமீபகாலமாகச் சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே மற்ற மாநிலங்கள் கேரளாவைப் போல அலட்சியமாக இருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு கொரோனா நோயாளி திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்தபின் அவர் வீட்டுக்குத் திரும்பியபோது அவரது உடலில் புழுக்கள் காணப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஒரு டாக்டர் உள்பட 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கொச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஊழியர்களின் கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும் ஒரு நோயாளி ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொச்சியைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவர் கடந்த ஜூலை மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு கொச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஜூலை 20ம் தேதி அவர் மரணமடைந்தார். இந்நிலையில் ஹாரிஸ் மரணமடைந்ததற்கு வெண்டிலேட்டர் டியூபுகள் மாறி இருந்ததுதான் காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த மருத்துவமனையின் நர்சிங் கண்காணிப்பாளர், நர்சுகளுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு ஆடியோ தகவல் அனுப்பி இருந்தார். அந்த தகவலில் இந்த விவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.சில நர்சுகள் பணியில் கவனக்குறைவாக இருக்கின்றனர். அலட்சியமாக இருந்தால் உயிர்கள் பலியாக வாய்ப்பு உண்டு. சிலரது கவனக் குறைவால் சில உயிர்கள் ஏற்கனவே பலியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்த ஹாரிஸ் என்ற நோயாளியின் வெண்டிலேட்டர் டியூபுகள் மாறி இருந்தன. இதை யாருமே கவனிக்கவில்லை . அதனால் தான் அவர் மரணமடைந்தார். எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தனது ஆடியோ தகவலில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆடியோ தகவல் தற்போது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து கேரளா முழுவதும் காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இதற்கிடையே மரணமடைந்த ஹாரிசின் உறவினர்கள் சம்பவத்திற்குக் காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி கொச்சி போலீசில் புகார் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஆடியோ தகவலை வெளியிட்ட நர்சிங் கண்காணிப்பாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி எர்ணாகுளம் மாவட்ட மருத்துவ அதிகாரிக்குக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா உத்தரவிட்டுள்ளார்.

You'r reading ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளி இறந்த பரிதாபம் நர்சுகள் அலட்சியம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை