பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் " பேய்மாமா " இதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம் புலி, பவர்ஸ்டார், அனு மோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஒரு காமெடி பட்டாளமே நடிக்கிறது. கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார் ஷக்தி சிதம்பரம். விக்னேஷ் ஏலப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழக செய்தி -ஒலிபரப்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டு வாழ்த்தி பேசினார்.
பின்னர் படம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது: வடிவேலுவை இரட்டை வேடங்களில் நடிக்க வெச்சு இந்த படத்தை எடுக்கலாம் என்று முதலில் யோசித்திருந்தேன். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை. அப்போ தான் இம்சை அரசன் படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகி பாபு நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை, ஆனால் அந்த செய்தி மூலமாக நாம் ஏன் யோகிபாபுவை இந்த படத்தில் நடிக்க வைக்க கூடாதுன்னு தோணுச்சு அவரிடம் பேசினேன், இது வடிவேலுவுக்கு பண்ணின கதை'ன்னு சொன்னதும் முதலில் தயங்கினார் பிறகு ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்தில் யோகிபாபு ஒரு பிக் பாக்கெட் அடிக்கிறவர். அவரோட வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்கள் தான் படம். இதில் கொரோனா மாதிரி ஒரு விஷயமும் இருக்கு. வெளிநாட்டு மருத்துவக் கம்பெனியுடன் சேர்ந்துக்கிட்டு இங்கே இருக்குற ஒருசிலர் ஒரு வைரஸை மக்களிடையே பரப்புகிறார்கள். அந்த வைரஸுக்கான மருந்தும் அவர்களிடம் இருக்கும். ஆனால் அதை உடனே வெளியிடாமல் நோய் அதிகமாக பரவவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தலைமுறை தலைமுறையாக சித்த மருத்துவ சேவையை செய்கின்ற குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார். இதை அறிந்த அந்த வெளிநாட்டு மருத்துவக்குழு அந்த சித்த மருத்துவக் குடும்ப்பதையே கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களது ஆவி யோகிபாபுவுடன் சேர்ந்து எதிரிகளை பழிவாங்கி எப்படி மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றினார்கள், என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு 2019 நவம்பர் மாதத்திலேயே முடித்துவிட்டோம். ஆனால் பிப்ரவரி, மார்ச்சில் தான் கொரோனாவே வந்துச்சு, இப்போ இருக்கிற நிலைமையும் எங்கள் கதைக்களமும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. படம் நிச்சயமாக OTT அதாவது ஒன்லி தமிழ்நாடு தியேட்டர் தான் ரிலீஸ் இவ்வாறு ஷக்தி சிதம்பரம் கூறினார்.
நடிகர் யோகிபாபு கூறியதாவது:
ஷக்தி சிதம்பரம் சார் இந்த மேடையில் என்னை கதாநாயகனாக நிற்க வச்சிட்டார். ரொம்ப பயமா இருக்கு. இந்தப்படம் முதலில் வடிவேல் சாருக்கு தான் பண்ணியது என்று ஷக்தி சார் சொன்னார். உடனே நான் " சார் வடிவேல் சார் ஜீனியஸ் சார். அதனால் எனக்கு எப்படி சார் செட்டாகும்"னு கேட்டேன். இந்தப்படம் வெற்றி அடைய உங்கள் எல்லாரோட ஆதரவும் அன்பும் வேணும். நான் சம்பள விஷயத்தில் பெரிய கறார் கிடையாது சார். என் மேனஜரிடம் வேண்டுமானால் கேளுங்க. சமீபத்தில் கூட ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் பொண்ணு.. ஒரு கதைப் பண்ணிருக்கேன் நீங்க பண்ணிக்கொடுக்கணும். ஆனால் என்கிட்ட பட்ஜெட் இல்ல. இந்தப் படம் நடந்தா தான் சார் எனக்கு கல்யாணம் நடக்கும்னு சொல்லிச்சு. நான் உடனே "ப்ரீயா நடிச்சித் தர்றேம்மா உனக்கு முதல்ல கல்யாணம் நடக்கட்டும்" என்று சொன்னேன். இப்படி நிறைய அட்ஜெஸ்மெண்ட் பண்ணிட்டு தான் இருக்கேன். சக்தி சிதம்பரம் சார் டயலாக்கில் நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவருக்கு நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். படத்தின் ட்ரைலரில் சொன்ன மாதிரி நான் காமெடியன் தான் காமெடியன் தான். அனைவருக்கும் நன்றி" என்றார்.