சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நேற்று தரிசனத்திற்குச் சென்ற தமிழக பக்தர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 16ம் தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. 17ம் தேதி முதல் ஐப்பசி மாத பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
சபரிமலையில் 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 250 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். இணையத்தில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.முன்பதிவு செய்யும்போது 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழை இணைக்க வேண்டும். சபரிமலைக்குச் சென்ற பின்னரும் நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில் வைத்து பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சபரிமலையில் வைத்து நடந்த ஆன்டிஜன் பரிசோதனையில் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக பத்தனம் திட்டா மாவட்டம் ரான்னியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.தரிசனத்திற்கு வந்த அந்த பக்தர் தனியாக காரில் வந்திருந்தார். இதனால் வேறு யாருக்கும் நோய் பரவ வாய்ப்பில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சபரிமலையில் வருகிற 21ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
தினமும் நெய்யபிஷேகம், படி பூஜை உள்படச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 21ம் தேதி இரவில் கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டல, மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்படும். தினமும் 250 பக்தர்களுக்குத் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது 200 பக்தர்களுக்குக் குறைவாகவே வந்து கொண்டிருக்கின்றனர்.