இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகிறது 800. முத்தையா வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முத்தையா முரளிதரன் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது இலங்கை அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். எனவே அவரது வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்காமல் விலக வேண்டும் என்று இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் தமிழ் ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிப்பதைத் தடுப்பது முறையல்ல என்று சரத்குமார் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் விஜய் நடித்த திருப்பாச்சி, அஜீத் நடித்த திருப்பதி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பேரரசு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
முத்தையா முரளிதரன் தமிழின துரோகி! விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்! அவரின் வாழ்க்கை வரலாறு படமான '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இன்று தமிழ்ப் பற்றோடு பல கண்டன குரல்கள், எதிர்ப்புக் குரல்கள் இது வரவேற்கக்கூடிய விஷயம் தான்!இன்று குரல் கொடுக்கும் சில அரசியல்வாதிகள் 'விடுதலைப் புலிகள்' தீவிரவாத இயக்கம் என்று அறிவித்த கட்சியோடு கூட்டணி வைத்ததே, அப்பொழுது எங்கேபோனது இந்த தமிழ்ப்பற்று? தமிழர்கள் லட்சக்கணக்கில் கொன்று குவிப்பதற்கு இங்கு சில கட்சிகளே காரணமாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை? விடுதலைப் புலிகளையும், ஈழ தமிழினத்தை அழிப்பதற்கு ஒரு தேசியக் கட்சி உறுதுணையாக இருந்ததே அதற்கு எதிராக இந்தக் குரல்கள் ஏன் ஒலிக்கவில்லை? மூன்று மணிநேர சினிமாவிற்கு இவ்வளவு எதிர்க்கும் நீங்கள், தமிழினம் அழியக்காரணமா இருந்த சில கட்சியிடம் , ஆளுவதற்குத் தமிழ்நாட்டையே ஒப்படைக்கத் துடிக்கிறீர்களே!
இப்பொழுது எங்கே போனது உங்கள் தமிழ்ப்பற்று! ஒருவர் வேடத்தில் ஒரு சினிமா நடிகன் நடிப்பதால் இந்த நாடு சீரழிந்து விடாது! ஆனால் ஆளக்கூடாதவர்கள் ஆண்டால் இந்த நாடு சீரழிந்து விடும்! இந்தப் பதிவு முத்தையா முரளிதரனுக்கு ஆதரவானது அல்ல!
சில தமிழ்ப்பற்று வேடதாரிகளுக்கு எதிரானது!
இவ்வாறு இயக்குனர் பேரரசு கூறி உள்ளார்.