இந்தியாவில் 2 மாதங்களுக்குப் பின், புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய்க்கு இது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் நோய்ப் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஜூலை 29ம் தேதியன்று புதிதாக 48,513 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருந்தது.
அதன்பின், தினமும் புதிதாகப் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கடந்த செப்.17ம் தேதியன்று மட்டும் புதிதாக 97 ஆயிரம் பேருக்குத் தொற்று பரவியிருந்தது. இதன் பின்னர், கடந்த 3 வாரங்களாகப் புதிதாகப் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று முதல் முறையாக இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. நேற்று புதிதாக 46,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 75 லட்சத்து 87,064 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. இவர்களில் 67 லட்சத்து 33,329 பேர் குணம் அடைந்துள்ளார்கள். தற்போது 7 லட்சத்து 48,538 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனாவுக்கு நேற்று மட்டும் 587 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, கொரோனாவல் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 15,197 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இது வரை 10 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.