பீகாரில் லாலு மகன் தேஜஸ்வி யாதவ் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென செருப்பு வீசப்பட்டது.
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. பீகாரில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் இதர கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.
இந்த அணியை எதிர்த்து, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம்(ஆர்ஜேடி), காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக லாலுவின் மகனும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.
அவர் நேற்று அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குடும்பா சட்டசபைத் தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்ராம் போட்டியிடுகிறார். கூட்டத்திற்குத் தேஜஸ்வி வந்ததும் அவரை வாழ்த்தி தொண்டர்கள் கோஷமிட்டனர். அவர் மேடையில் அமர்ந்ததும் திடீரென எங்கிருந்தோ ஒரு செருப்பு அவரை நோக்கி வந்தது. எனினும், அது அவர் மீது படாமல் பின்னால் போய் விழுந்தது. இதனால், மேடையில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். எனினும், ஓரிரு வினாடிகளில் பரபரப்பு ஓய்ந்தது. தேஜஸ்வி தனது பேச்சில் அதைப் பற்றியே குறிப்பிடவில்லை.இதற்கிடையே, செருப்பு வீசியவர் மாற்றுத்திறனாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் எதற்காக அப்படிச் செய்தார் என்பது தெரியவில்லை.