கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்குவதற்கு பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவில் கடந்த ஆண்டில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதும், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த.வுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்தது. அப்போது முதலமைச்சராகக் குமாரசாமி பதவி வகித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. வளைத்தது.இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 பேர், ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த 3 பேர் என 17 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதன்பின், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. கட்சி தாவி வந்த காங்கிரசார் 15 பேருக்கு எடியூரப்பா அமைச்சர் பதவி தந்தார். இதில் பாஜக தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக பாஜக தலைவர் பசனகவுடா நேற்று(அக்.20) ஒரு கூட்டத்தில் பேசுகையில், கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கிவிட்டு புதிய முதல்வரை நியமிக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறினார். அவர் கூறுகையில், கர்நாடகாவின் வடக்கு மாவட்டங்களில்தான் பாஜகவுக்கு மக்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். வடக்கு கர்நாடகாவில்தான் பாஜகவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாண்டியா, கோலார், சாம்ராஜ்நகரா பகுதிகளில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை.
ஆனால், எடியூரப்பா அந்த பகுதிகளுக்குத்தான் நிதி ஒதுக்குகிறார் சிவமோகாவுக்கே அதிக நிதியைக் கொடுக்கிறார். எடியூரப்பாவின் செயல்பாடுகள் சரியில்லை. அவருடைய நேரம் முடிந்து விட்டது. பாஜக தலைமை விரைவில் புதிய முதல்வரைத் தேர்வு செய்யவிருக்கிறதுஎன்று கூறினார். இவரது பேச்சு தற்போது கர்நாடக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.