இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் மறக்க முடியாத தாக்குதல் பதான்கோட் தாக்குதல். ஜெயிஷ்-இ-முகம்மது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. தற்போது அதே போன்று ஒரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் முனைப்பாக உள்ளன என்றும், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ இதற்காக, தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சி முகாம்களை தொடங்கியுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முறை ராஜஸ்தானில் உள்ள இராணுவ தளங்களை தீவிரவாதிகள் குறிவைத்துள்ளனர் எனவும், இது பதான்கோட் தாக்குதலுக்கு இணையான தாக்குதலாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர் எனவும் அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஜெயிஷ்-இ-முகம்மது அமைப்பின் பாலகோடு முகாம்களில் புதிய தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க உயர் மட்ட கமாண்டர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக கட்டுப்பாட்டு அறை செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலகோட் பகுதிகளில் இந்திய விமானப்படை சர்ஜிக்கல் தாக்குதல் நடந்த 18 மாதங்களுக்கு பின்பு, அங்கு மீண்டும் முகாம்கள் செயல்பட துவங்கியுள்ளது கூடுதலாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.