ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் சென்றால் 3 மாதத்திற்கு லைசென்சை ரத்து செய்யக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எவ்வளவு தான் அபராதம் விதித்தாலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கிறது.
இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதன்படி அபராதத் தொகையைக் கடுமையாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து சில குற்றங்களுக்கு மட்டும் அந்தந்த மாநில அரசுகளே அபராத தொகையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட சில மாநிலங்களில் சில குற்றங்களுக்கு அபராதத் தொகை குறைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரளாவில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி இறப்பது அதிகரித்து வந்தது. ஹெல்மெட் அணியாதவர்கள் தான் பெரும்பாலும் அதிகமாக இறப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஹெல்மெட் சட்டத்தைக் கடுமையாக்க கேரள அரசு முடிவெடுத்தது.இதன்படி இனிமுதல் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்களது லைசென்ஸ் 3 மாதத்திற்கு ரத்து செய்யப்படும். அதுமட்டுமில்லாமல் 500 ரூபாய் அபராதமும் கட்டவேண்டும். இது தவிர சமூக சேவையும் செய்ய வேண்டும். அத்துடன் முடியவில்லை, மோட்டார் வாகனத் துறை ஏற்பாடு செய்துள்ள பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சாலை விதிகள் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த உத்தரவு கேரளாவில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.