மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்கு நீட் தேர்வில் 590 மதிப்பெண்கள் கிடைத்தன. ஆனால் இணையதளத்தில் அந்த மாணவிக்குத் தவறுதலாக 6 மதிப்பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அதிர்ச்சியில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.நீட் தேர்வு காரணமாக உயிர்கள் பலியாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலும் மதிப்பெண்கள் குறைந்த மனவேதனையில் தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடந்து வந்தன.ஆனால் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும் அதிகாரிகளின் தவறு காரணமாக ஒரு மாணவியின் உயிர் பறிபோன பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவிக்குத் தான் இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இங்குள்ள சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விதி சூரியவம்சி (18). இவர் மிக நன்றாகப் படிக்கும் மாணவி ஆவார். ஒன்றாவது வகுப்பிலிருந்தே இவர் தான் வகுப்பில் முதல் மாணவியாக வருவார். இளம் வயதிலேயே டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பது தான் இந்த மாணவியின் ஆசை. அவரது பெற்றோருக்கும் அது ஒரு கனவாக இருந்து வந்தது.இந்த வருடம் பிளஸ்-2 தேர்வு எழுதிய இவர் கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நீட் தேர்வுக்குச் சிறப்புப் பயிற்சியும் பெற்று வந்தார்.
இந்நிலையில் தேர்வும் முடிந்தது. தான் நன்றாக எழுதியிருப்பதாகவும், குறைந்தது 600 மதிப்பெண்களாவது கிடைக்கும் என்றும் இவர் தன்னுடைய பெற்றோர் மற்றும் சக மாணவிகளுடன் கூறியிருந்தார். ஆனால் முடிவு வந்தபோது அவருக்கு 6 மதிப்பெண்கள் என இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த சூரியவம்சிக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மனவேதனையில் அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அந்த மாணவியின் பெற்றோருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ஓஎம்ஆர் ஷீட் வெளியானது.
அதில் பார்த்தபோது, அந்த மாணவியின் மதிப்பெண்கள் 590 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இணையதளத்தில் அதிகாரிகள் தவறாகப் பதிவேற்றம் செய்தது தான் இதற்குக் காரணம் எனத் தெரியவந்தது. இந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவரத்தைப் பெற்றோர் போலீசில் உடனடியாக தெரிவிக்கவில்லை. 2 நாட்களுக்குப் பின்னர் தான் போலீசுக்குத் தகவல் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.