நாடு முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு மது வகைகளுக்கு விரைவில் தடை வருகிறது.பிரதமர் மோடி சமீபத்தில் 'ஆத்ம நிர்பர் பாரத்' என்ற திட்டத்தை அறிவித்தார். இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே அனைவரும் பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டுப் பொருட்கள் இறக்குமதியைக் குறைக்க வேண்டும். இது தான் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமாகும். முதல் கட்டமாக ராணுவ கேன்டீன்களில் இதை அமல்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட ராணுவ கேன்டீன்கள் உள்ளன. ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்குக் குறைந்த விலையில் அனைத்து பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
பலசரக்கு பொருட்களில் தொடங்கி டிவி, பிரிட்ஜ், லேப்டாப் உள்பட அனைத்து பொருட்களும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இது தவிர ராணுவ வீரர்களுக்கு மாதந்தோறும் கோட்டா அடிப்படையில் இங்கு மது வகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டுமல்லாமல் மது வகைகளும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்திய கணக்கின்படி ராணுவ கேன்டீன்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் 6 முதல் 7 சதவீதம் வரை பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை ஆகும்.
இந்நிலையில் முதல்கட்டமாக ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு மது வகைகள் விற்பனையைத் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பாகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.