கேரளாவில் டிஒய்எப்ஐ தொண்டரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவரான டிஒய்எப்ஐ தொண்டரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள நரியம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் மனு மனோஜ் (24). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (டிஒய்எப்ஐ) தொண்டரான இவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் மனோஜுக்கு அப்பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்த விவரம் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் கட்டப்பனை போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் மனோஜை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து மனோஜைக் கைது செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவினர் கட்டப்பனை போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று அந்த சிறுமி தனது வீட்டுக் குளியலறையில் வைத்து உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார். அந்த சிறுமியின் அலறலைக் கேட்டு விரைந்து சென்ற பெற்றோர் தீயை அணைத்தனர்.
அவரை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உடலில் 40 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்ட அந்த சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்துக் கட்டப்பனை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனோஜை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மனோஜை போலீசார் இன்று கைது செய்தனர். இதற்கிடையே மனோஜை தங்களது அமைப்பிலிருந்து நீக்கியுள்ளதாக இடுக்கி மாவட்ட டிஒய்எப்ஐ அமைப்பு தெரிவித்துள்ளது.