டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் தொடக்க கட்டத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்த மாநிலங்களில் ஒன்று டெல்லி. பல மாதங்கள் இங்கு தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் டெல்லியில் உள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என்று டெல்லி அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து டெல்லி அரசு இந்த உத்தரவை பின்னர் வாபஸ் பெற்றது. டெல்லியில் இதுவரை 3.51 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3.19 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 6,225 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது 26, 477 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 4,116 பேருக்கு நோய் பரவியது. கடந்த 35 நாட்களில் நேற்று தான் மிக அதிகம் பேருக்கு நோய் பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிலையில் டெல்லியில் விரைவில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். நவராத்திரி விழா நடைபெற்று வருவதாலும், தீபாவளி பண்டிகை மற்றும் குளிர் காலம் நெருங்கி வருவதாலும் டெல்லியில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 12,000 முதல் 14,000 வரை இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் 15 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகள் தயாராக இருப்பதாக அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.