பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பீகாரில் முதல் கட்டத் தேர்தல் நாளை(அக்.28) நடைபெற உள்ளது. நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் 2ம் கட்ட, 3ம் கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அங்குக் கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெறுகிறது.
தற்போது ஆளும் கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.அதே சமயம், மறைந்த ராம்விலாஸ் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி, இந்தக் கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. அதே சமயம், டெல்லியில் பாஜக கூட்டணியில் நீடிப்பதாக பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் கூறிவருகிறார்.
மேலும், மோடியைப் புகழ்ந்தும், நிதிஷ்குமாரை மிகக் கடுமையாக விமர்சித்தும் வருகிறார். அத்துடன் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள அந்த கட்சி, பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. இதனால், பாஜக மறைமுகமாக நிதிஷ்குமாருக்கு நெருக்கடி கொடுப்பதாகப் பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த வாரம் பீகாரில் பிரச்சாரம் செய்தார். ஒரே நாளில் 3 கூட்டங்களில் அவர் பேசினார். முதல்வர் நிதிஷ்குமாரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆனால், அதே நாளில் செய்தித்தாள்களில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கொடுத்த பிரச்சார விளம்பரங்களில் பிரதமர் மோடி படமோ, மத்திய அரசின் சாதனைகளோ இடம் பெறவில்லை. அதே போல், பாஜக கொடுத்த விளம்பரங்களிலும் பிரதமர் மோடி படங்களே இடம்பெற்றன. நிதிஷ்குமாரின் படங்கள் இடம்பெறவில்லை. மேலும், பாஜகவின் போஸ்டர்களிலும் நிதிஷ் படங்கள் இடம்பெறவில்லை.இதற்கிடையே, கூட்டணியில் இருந்து விலகிய லோக்ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான், தனது பிரச்சாரத்தில் நிதிஷ்குமாரை வறுத்தெடுத்து வருகிறார்.
ஆனால், பிரதமர் மோடியைப் புகழ்ந்து வருகிறார். மேலும், தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் சேர்ந்து லோக்ஜனசக்தி ஆட்சியில் அமரும் என்ற ரீதியில் பேசி வருகிறார். இதனால், ஆளும் ஜக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணியில் வெளியே தெரியாத விரிசல் ஏற்பட்டுள்ளது.தற்போது இந்த விரிசல் குறித்து லாலுவின் மகனும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ஆர்ஜேடி-காங்கிரஸ் மெகா கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் கூறி வருகின்றன.