பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதல் கட்டத் தேர்தல் நடக்கும் 71 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பீகாரில் நிதிஷ்குமார் தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வராக உள்ளதால், அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடம் காணப்படுகிறது. மேலும், அவரது ஐக்கியஜனதா தளம் கட்சிக்கும், கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதனால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ள லாலுவின் ஆர்ஜேடி கட்சிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் மக்களின் வரவேற்பைப் பார்க்கும் போதே இது வெளிப்படையாகத் தெரிகிறது. சமூக ஊடகங்களில் நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு உள்ள வரவேற்பை இ்ந்தியா டுடே டிஜிட்டல் மீடியா ஆய்வு செய்தது. இதில், தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய பிறகு நிதிஷ்குமாரின் முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட 67 பதிவுகளுக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் லைக் கிடைத்திருக்கிறது. அதே காலத்தில், தேஜஸ்வி யாதவ் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட 94 பதிவுகளுக்கு 47 லட்சம் லைக் கிடைத்திருக்கிறது. அதாவது, நிதிஷ்குமாரின் ஒரு பதிவுக்குச் சராசரியாக 5,572 லைக்கும், தேஜஸ்வியின் ஒரு பதிவுக்குச் சராசரியாக 51 ஆயிரம் லைக்கும் கிடைத்துள்ளது.
மேலும், நிதிஷ்குமாரின் பதிவுக்குச் சராசரியாக 1.65 சதவிகிதம் பேர், ஆங்ரி கமென்ட் போட்டுள்ளனர். அதேசமயம், தேஜஸ்வியின் பதிவுக்கு சராசரியாக 0.04 சதவிகிதம் பேர் ஆங்ரி கமென்ட் போட்டுள்ளார்கள். இதே போல், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தேஜஸ்வியின் செல்வாக்கு நிதிஷ்குமாரை விட அதிகமாக உயர்ந்திருப்பது தெரிகிறது. இது தேர்தலில் எதிரொலிக்குமா என்பது முடிவுகளில்தான் தெரியும்.