பீகாரில் சர்க்கரை தொழிற்சாலை தொடங்கி மக்களுடன் சேர்ந்து டீ குடிப்பேன் என்று கடந்த தேர்தலில் வாக்குறுதி தந்த மோடி அந்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
பீகார் மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 71 தொகுதிகளில் இன்று தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3ம் தேதியும், மூன்றாவது கட்ட தேர்தல் நவம்பர் 7ம் தேதியும் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள 94 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ளது. சம்பாரன் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியது: பீகாரில் ஒரு சர்க்கரை தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், தொழிற்சாலை தொடங்கிய பின்னர் மக்களுடன் சேர்ந்து டீ குடிப்பேன் என்றும் கடந்த தேர்தலின் போது பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார். அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் உங்களுடன் சேர்ந்து டீ குடித்தாரா?
பஞ்சாபில் தசரா என்ற இடத்தில் பிரதமர் மோடியின் கொடும்பாவியை விவசாயிகள் எரித்தனர். அதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டு போனேன். ஒரு நாட்டின் பிரதமரின் கொடும்பாவியை எரிப்பது என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். விவசாயிகளுக்கு மோடி மீது அந்த அளவுக்கு வெறுப்பு இருந்தால் தான் இந்த செயல் நடந்துள்ளது.நிதிஷ்குமார் கடந்த 2006ல் பீகார் மக்களுக்கு என்ன துரோகம் செய்தாரோ அதே துரோகத்தைத் தான் பிரதமர் மோடி பஞ்சாப் மக்களிடமும், இந்த நாட்டு மக்களிடமும் செய்கிறார். சமீபகாலமாக வேலையில்லா திண்டாட்டத்தை குறித்து பிரதமர் பேச மறுக்கிறார். பீகாரில் உள்ள மக்கள் இனியும் மோடியின் பொய்களை நம்ப தயாராக இல்லை என்பது தான் அதற்குக் காரணமாகும். பல ஆண்டுகள் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்துள்ளது. எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சில கட்டுப்பாடுகள் எங்களுக்கு இருக்கிறது.
என்ன இருந்தாலும் நாங்கள் சிரித்துக்கொண்டே பொய் சொல்ல மாட்டோம். பீகார் மக்கள் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய என்ன அவசியம் உள்ளது? நம்முடைய சகோதரர்களுக்கு ஏதாவது குறை உள்ளதா? நிச்சயமாக கிடையாது. உங்களுடைய முதல்வருக்கும், பிரதமருக்கும் தான் குறைகள் உள்ளன. ரூபாய் நோட்டை தடை செய்ததும், லாக்டவுனையும் கடைசி நிமிடத்தில் தான் பிரதமர் அறிவித்தார். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பட்ட துன்பங்கள் மிக அதிகம். ஆனால் பெரும் தொழிலதிபர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.