கேரளாவில் அடுத்த பரபரப்பு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிபிஎம் மாநில செயலாளரின் மகன் கைது

by Nishanth, Oct 29, 2020, 16:54 PM IST

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்தது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் ஆளும் இடது முன்னணி அரசுக்கு இது போதாத காலம் என்றே கூற வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் வெளியான அன்று முதல் பினராயி விஜயனின் தலைமையிலான அரசுக்கு அடிமேல் அடி கிடைத்து வருகிறது.

தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் மிக நெருங்கிய தொடர்பு இருந்ததாக வெளியான தகவலால் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராகவும், ஐடி துறை செயலாளராகவும் இருந்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது மத்திய அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. கடந்த நான்கு மாதங்களாக விசாரணை நடத்தியும் அவர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காததால் அவருக்கு எதிரான தகுந்த ஆதாரங்கள் இருந்தும் சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறையால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தது.

இதற்கிடையே முன்ஜாமீன் கோரி சிவசங்கர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து நேற்று அதிரடியாக சிவசங்கரை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். கடந்த நான்கு வருடங்களாகக் கேரள அரசில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டது கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

முதல்வர் பினராயி விஜயன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மேலும் ஒரு பலத்த அடி கிடைத்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளராக இருப்பவர் கொடியேறி பாலகிருஷ்ணன். இவரது மகன் பினீஷ் கொடியேறி. சில மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். நீண்ட காலமாகவே இவர் மீது பலாத்காரம், மோசடி உட்பட ஏராளமான புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை இவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் போதைப் பொருட்களுடன் ஒரு டிவி நடிகை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் முகமது அனூப் என்பவர் உள்பட 2 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.அனூப்புக்கு பினீஷ் கொடியேறி அடிக்கடி லட்சக்கணக்கில் பண உதவி செய்து வந்துள்ளார்.

மேலும் பினீஷ் கொடியேறிக்கு பெங்களூருவில் பல நிதி நிறுவனங்கள் இருப்பதும் தெரியவந்தது. இதற்கான கணக்குகளை இவர் ஒழுங்காக அரசிடம் தாக்கல் செய்யாததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய அமலாக்கத் துறையினர் பினீஷ் கொடியேறியை பெங்களூருவுக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இவரது பதில்களில் முரண்பாடுகள் இருப்பதைக் கண்டுபிடித்த மத்திய அமலாக்கத் துறை இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறினர்.

இதையடுத்து பினீஷ் கொடியேறி இன்று மீண்டும் பெங்களூருவில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. இதன் பின்னர் அவரை மத்திய அமலாக்கத் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரின் மகன் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டது கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கேரள இடது முன்னணி அரசுக்கு நெருக்கடி மேலும் முற்றி உள்ளது.

You'r reading கேரளாவில் அடுத்த பரபரப்பு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிபிஎம் மாநில செயலாளரின் மகன் கைது Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை