பள்ளிப் பருவத்திலிருந்தே பல வருடங்களாக உருகி உருகிக் காதலித்தும் தன்னை ஏமாற்றி வேறு பெண்ணின் பின்னால் சென்ற காதலனைப் பழிதீர்க்க அவர் மீது ஆசிட் வீசிய காதலி கைது செய்யப்பட்டார். திரிபுரா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.வழக்கமாகக் காதலிக்க மறுக்கும் அல்லது திருமணம் செய்ய மறுக்கும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்துத் தான் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் திரிபுரா மாநிலத்தில் இதற்கு நேர்மாறான ஒரு சம்பவம் நடந்துள்ளது. திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா அருகே உள்ளது கொவாய். இங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் பெல்சரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சவுமன் சந்தல் (30). இதே பகுதியைச் சேர்ந்தவர் பினாட்டா சந்தல் (27). இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தனர். அப்போதே இருவரும் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் 8ம் வகுப்பிலேயே பினாட்டா படிப்பை நிறுத்திவிட்டார். தொடர்ந்து படித்த சவுமன்பிளஸ் 2 தேர்வானார். இதன்பிறகு கல்லூரியில் படிப்பதற்காக பூனாவுக்கு சவுமன் புறப்பட்டார். செல்லும்போது தனது காதலி பினாட்டாவையும் அவர் உடன் கொண்டு சென்றார். அங்குச் சென்ற பின்னர் தனது கல்லூரிப் படிப்பு செலவுக்காக பினாட்டாவை வேலைக்குச் செல்லுமாறு சவுமன் வற்புறுத்தினார். தனது காதலனுக்காக அதற்குச் சம்மதித்த பினாட்டா அங்குள்ள வீடுகளுக்குச் சென்று வேலை பார்த்து வந்தார். அந்த பணத்தில் தான் சவுமன் கல்லூரிப் படிப்பை முடித்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன் பினாட்டாவை பூனாவிலேயே விட்டுவிட்டு சவுமன் ஊருக்குத் திரும்பி விட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த பினாட்டா சில மாதங்களுக்குப் பின்னர் காதலனைத் தேடி ஊருக்குச் சென்றார். ஆனால் அவர் அங்கு இல்லை. தன்னுடைய காதலன் வேறு ஒரு பெண்ணை காதலித்து வரும் விவரமும் அவருக்குத் தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த பினாட்டா வேலைதேடி ராஞ்சிக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பூஜை விடுமுறைக்காக பினாட்டா ஊருக்குச் சென்றார். அப்போது தனது காதலன் ஊரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்குச் சென்ற பினாட்டா, தன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் சவுமன் அதற்கு மறுத்து விட்டார். இதில் ஆத்திரமடைந்த பினாட்டா, தயாராகக் கொண்டு வந்திருந்த ஆசிடை சவுமன் மீது வீசினார். இதில் பலத்த காயமடைந்த அவரை உடனடியாக அகர்தலாவிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து பினாட்டாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.